பல நண்பர்களும் கேட்டு கேட்டு அலுத்துவிட்டார்கள். இனிமையான பயணப்பகிர்வுகளை இறைவன் அருளால் இதோ தொடங்கிவிட்டேன்.
எகிப்தில் நாங்கள் இருக்கும் இடம் அலெக்சாண்டிரியா எனும் அழகான கடற்கரை நகரம். மாவீரன் அலெக்சாண்டரால் போர் வெற்றியின் சின்னமாக உருவாக்கப்பட்டது. மத்தியதரைக்கடல் கரையில் அமைந்துள்ளதால் தலைநகர் கெய்ரோவை விட எப்போதும் வெப்பநிலை ஐந்தாறு டிகிரி குறைவாகவே இருக்கும்.
தலைநகர் கெய்ரோவிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் அலெக்சாண்டிரியா நகரம் உள்ளது. மக்கள் உருவமைப்பு, கட்டிடங்கள், வாகன பரபரப்பு எல்லாம் நமது மும்பையைப் போன்றே இருக்கும். ஆனால் ‘அப்பர் எகிப்து’ என்றழைக்கப்படும் அஸ்வான், லக்சூர் போன்ற நைல் நதிக்கரை நகரங்கள் பசுமையாகவும், மக்களும் தோற்ற அமைப்பில் தென்னிந்தியர்களை போன்றே இருப்பார்கள். பல வரலாற்று புராதான இடங்கள் அனைத்துமே அப்பர் எகிப்தில்தான் உள்ளன.
அலெக்சாண்டிரியா நகரம் – எனது அறையிலிருந்து சில அழகான காட்சிகள்
ரமழானுக்கு நான்கு நாட்கள் விடுமுறை என்று உறுதியாகிய நிலையில் அஸ்வான் செல்ல எல்லா நண்பர்களும் திட்டமிட்டனர். பயணதூரம் 3000 கிலோமீட்டர் போக வர என்றால் மொத்தமாக 7000 கிலோ மீட்டருக்கு மேலாகிவிடும் என்பதால் யோசனையாகவே இருந்தது. சில நண்பர்கள் மட்டும் மற்றவர்களிடம் ஏதும் சொல்லாமல் பேக்கேஜ் டூர் புக் செய்துவிட்டார்கள்.
பேக்கேஜ் டூர் மொத்தம் நான்கு நாட்கள். தலைநகர் கெய்ரோவிலிருந்து விமானம் மூலம் அஸ்வான் சென்று பின் அங்கிருந்து நைல்குரூஸ் எனப்படும் உல்லாசக்கப்பல்கள் மூலம் நைல்நதி வழியாகவே எல்லா இடங்களையும் சென்று பார்ப்பது. கப்பல்களிலே எல்லோருக்கும் தனித்தனி அறை, மூன்று வேளையும் விருப்பப்பட்ட் சைவ/அசைவ சாப்பாடு என எல்லா வசதியும் இருக்கும். கட்டணத்தொகை மொத்தமாக அமெரிக்க பணம் 1000 டாலர் ஆகும். எல்லா இடங்களுக்கும் தேவையான நுழைவுச்சீட்டு கட்டணம் எல்லாமே உள்ளடக்கம்.
சொகுசு ரயில் வசதியும் இருக்கிறது. ஆனால் எல்லா இடங்களுக்கும் செல்ல அங்கங்கே வண்டி வாடகைக்கு எடுக்கவேண்டும். தங்கவும் இடம் பார்க்க வேண்டும். எப்படி செல்ல என ஒரே குழப்பமாக இருந்தது. உள்ளூர் நண்பர்களிடம் விசாரித்தாலும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் எங்கள் ஓட்டுநர் இங்கிருந்தே வண்டியில் சென்றால் எல்லா இடங்களையும் பார்ப்பது எளிதாக இருக்கும் என்று ஒரு யோசனை சொன்னார்.
எங்கள் அலுவலகத்தில் ஒப்பந்தமுறையில் நிறைய வாகனங்கள் உள்ளன. நான்கு நாள் விடுமுறை என்பதால் ஒரு வாகன உரிமையாளர் பயணத்திற்கு வாகனம் தர இசைந்தார். வாகனத்துடன் ஒரு ஓட்டுநர் என பணம் எல்லாம் பேசி முடிவாயிற்று. ஆனால் பயணதூரம் அதிகம் என்பதால் ஒரு ஓட்டுநர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நண்பர்களிடம் மீண்டும், மீண்டும் என் கருத்தை வலியுறுத்தி எங்கள் வாகன ஓட்டுநரையும் உடன் அழைத்துச்செல்லலாம் என முடிவுசெய்தோம்.
(பயணம் தொடரும்)
16 comments:
இது எல்லாம் உங்க ரூம்ல இருந்து எடுத்ததா.. கொடுத்து வச்ச மகராசன் அண்ணா நீங்க.. பொறாமையா இருக்கு..
wow.. படங்கள் அருமை.. தொடரட்டும் உங்கள் பணி..
ம்ம்ம்ம்... தொடருங்க.. கொஞ்சம் கூடுதலா எழுதுங்க.. இன்னும் பயணம் தொடங்கவே இல்ல, அதுக்குள்ளே இரண்டு பாகம் முடிஞ்சுடுச்சு.. :(
பயணக்கட்டுரை அருமை வாழ்த்துக்கள்....ராஜா
அழகான இடங்களோட பயணக்கட்டுரை தொடரப்போகுது.
இப்பவே நல்லாருக்கு.தொடரட்டும்.
நாங்களும் பின்னுக்கு வரோம்.
பயணக் கட்டுரைக்கு நல்ல தொடக்கம்.
விரிவாகவே எழுதுங்கள்; நீளம் குறித்து அஞ்சவேண்டாம். (எந்த இடத்தில் `தொடரும்' என்று சொல்லி முடிப்பது என்பதனை உங்களுக்குச் சொல்லியா தரவேண்டும்?)
பயணம் அருமை ;)
ம்......ஒருவழியா பயண விருந்தை ஆரம்பிச்சிட்டீங்க.... வித விதமா படைங்க ராஜா.... வழக்கம்போல் ஆவலாய்... ஆர்வமாய்...
பிரபாகர்.
துபாய் ராஜாவோட எகிப்து பயணக்கட்டுரையும் படங்களும் ரொம்பவும் அழகு.
படிக்கும் போதே ஆர்வம் அதிகமாகிறதே !
தொடருங்கள் ....
முதல் பாகம் இல்லயே
பயணம் இனிதே தொடங்குகிறது. படங்களும் மிக அழகு. தொடர வாழ்த்துக்கள்!
அருமையான படங்கள். பயணம் சிறப்பாய் தொடக்கம்.:)
நன்றாக உள்ளது பயணங்கள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
படங்கள் அழகு.
sooper sir,
Post a Comment