Tuesday, March 21, 2017

வண்டித் தடம்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்...

என்னும் வள்ளுவர் மொழியை பொய்யாக்கும் விதமாக பருவகால மாற்றங்கள், தட்ப வெப்ப வேறுபாடு, மழை இன்மை, வரலாறு காணாத வறட்சி.  தொழிலாளர் தட்டுப்பாடு, கூலி உயர்வு, விதை, உரங்கள் பிரச்சினை, வங்கிக்கடன் நெருக்கடி, வேளாண்மை பொருட்கள் விலை இன்மை என்று பல பிரச்சினைகளால் விவசாயமும், விவசாயம் செய்வோரும் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் வீண்வம்பு, வறட்டுக் கவுரவம், பொய், பொறாமை, பித்தலாட்டம், எரிச்சல், பெருமைக்குப் பிடிவாதம், அடுத்துக் கெடுப்பது போன்ற குணங்கள் கொண்ட சிலரால் லாபம் பார்க்க முடியாமல் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என விரும்பி கஷ்டப்பட்டு விவசாயம் செய்து வரும் பலரும் பாதிக்கப்படுவதே இக்கதையின் மூலக்கருவாகும்.




வண்டித் தடம்

அந்த வருடம் ஐப்பசி மாதம் தொடங்கிய மழையானது கார்த்திகை, மார்கழியில் கனஜோராகவும், பொங்கல் முடிந்த பின்னும்  தை மாதத்தில்    நெய்மழையாகவும், மாசி மாதம் முதல் வாரம் வரை பூ மழையாகவும் தொடர்ந்து  நல்ல மழை பெய்திருந்ததால், மணிமுத்தாறு அணை பெருகி, நிரம்பி வழிந்து எட்டுகண்மதகுகள் வழியாக மறுகாலும் பாய்ந்து ஆற்றிலும் வெள்ளம் சென்று இருந்தது.


வழக்கமாக பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மதகு வழியாக  வெளிவரும் நீரானது, பெருங்கால் வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் மடைகள் மூலமாக வாய்க்கால், மற்றும் ஓடைகள் வழி வந்து வயல்கள் வரை கொண்டு செல்லப்பட்டு விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு, பின் வயல்களில் உள்ள  வடிகால்கள் வழியாக மீண்டும் ஓடைகள், வாய்க்கால் வழியாக ஆற்றை அடைந்து விடும். அந்த ஆண்டு மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் அணையிலிருக்கும் நீரை பயன்படுத்தாத வகையில் பெருங்கால் மதகைத் திறக்காமல் பெருங்கால், வாய்க்கால், ஓடைகளில் வெள்ளமாக வந்த மழைநீரைக் கொண்டே அந்த வருடம் விவசாயம் செய்யப்பட்டு இருந்தது.


தொடர்மழை காரணமாக  ஐப்பசி மாதம் முதல் சோம்பலாக இருந்த சூரியனும்  மழை நின்றவுடன் சுறுசுறுப்பானதால், மாசிமாதம் இரண்டாம் வாரம் முதலே வெயில் மண்டையை பிளக்கத் தொடங்கி விட்டது. பொதுவாகவே எல்லா ஊரிலும் தொடர் விவசாயம் செய்ய மாட்டார்கள். எந்த ஒரு பயிர் இட்டிருந்தாலும் அறுவடைக்குப்பின் வயலில் எந்த வேலையும் செய்யாமல்   இரண்டு, மூன்று மாதம் நிலத்தை ஆறப்போட்டு விடுவார்கள். அப்போதுதான் அடுத்த போகம் சிறப்பாக இருக்கும். மண்ணையும் நம் கண் போல காத்திடச் சொல்லிக் கொடுத்த நம் முன்னோரின் சிறப்பே சிறப்பு.


வயல்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களைக் காப்பதற்காக, விவசாயம் நடைபெறும் காலங்களில் பொதுவாக புலிப்பட்டி ஊரில் உள்ள ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஆற்றைக் கடந்து வயல்கள் அற்ற அக்கரையில் கொண்டு விடுவார்கள். அல்லது ஊரின் ஒரு நுழைவாயிலாக விளங்கும் பெருங்கால் பாலத்தின் மறுபக்கம் அமைந்துள்ள மணிமுத்தாறு ஊரின் தமிழ்நாடு சிறப்புக்காவல்படை காவலர் குடியிருப்பு, மீன்பண்ணைத் துறை மற்றும் அணை பராமரிப்பிற்காக  குடி அமர்த்தப்பட்டு இருக்கும் பொதுப்பணி துறை ஊழியர்களின் குடியிருப்புகளைத் தாண்டி  எண்பதடி தலைவாய்க்கால் பகுதி மற்றும் அணைப்பூங்கா பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு விட்டுவிட்டு அவரவர் வயல்களுக்கோ அல்லது அடுத்தவர் வயலில் வேலைகளுக்கோ சென்று விடுவார்கள். மாலை நேரங்களில் மேய்ச்சல் முடித்த ஆடு, மாடுகள் தாங்களாகவே வீடு திரும்பி விடும்.


அறுவடை முடிந்து நிலங்களை ஆறப்போட்டிருக்கும் காலங்களில் ஆடு, மாடுகளை வயல்காட்டுப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டு விடுவார்கள். அவையும் வயல்களிலும், வாய்க்கால், ஓடைக் கரைப்பகுதிகளில் உள்ள பயிர், பச்சைகளை மேய்ந்து கொண்டிருக்கும். விவசாய வேலைகள் ஏதும் இல்லாத காரணத்தாலும், வீட்டில் இருந்தாலும் பொழுது போகாது என்பதாலும் ஆடு, மாடுகள் அடுத்தவர் பயிரை மேய்ந்து பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதாலும் ஆடுமாடு வளர்ப்போர் சிலர் அங்கங்கே வயல்களின் நடுவே அமைந்துள்ள களத்துமேடுகளின் மரநிழலில் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டு அவரவர் கால்நடைகள் மேய்வதை கண்காணித்துக் கொண்டு இருப்பர்.




புலிப்பட்டி ஊரில் தை மாதமே பெரும்பாலும் எல்லா வயல்களிலும் அறுவடை முடிந்து விட்டிருந்தாலும் அங்கங்கே பூமிளகாய்வாழை மற்றும்  காய்கறி போட்டிருந்த சில வயல்களில் மட்டும் ஆடுமாடுகள் நுழைந்து பயிர்களை அழித்து விடாதவாறு சுற்றியும் நைலான் வலை கொண்டு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.  திருட்டுச்சுவை கண்ட சில ஆடுமாடுகள் நைலான் வலை வேலியையும் மீறி வயல்களில் நுழைந்து விடும் என்பதற்காக  அங்கொன்றும்இங்கொன்றுமாய் ஆள்கள், நாய்களோடு காவல் இருப்பார்கள்.




அப்படித்தான் அன்றும் ஆடுமாடுகள் அங்கங்கு மேய்ந்து கொண்டிருந்தன. புல், பூண்டு, செடி, கொடிகளை அவை கடித்து இழுத்து. மேயும்போதும் மற்றும் காலடி குளம்பு பட்டு ஈரநிலத்திலிருந்து கிளம்பும் புழு, பூச்சிகளை உண்பதற்காக கொக்கு, நாரை, மைனா, குருவிகள் என பலவிதமான பறவைகளும் நடந்தும், ஓடியும், பறந்துமாக விறுவிறுப்பாக போட்டி போட்டிக்கொண்டு புல்லினங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தன. அப்போது மேலவாய்க்கால் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடுமாடுகள் கத்திக்கொண்டு, ஓடுவதும், பறவையினங்கள் கலைந்து சடசடவென சத்தம் எழுப்பியவாறு கூட்டமாக குரல் கொடுத்தவாறு பறப்பதும், அங்கங்கு  காவலுக்கு நிற்கும் நாய்கள் அலறிக் குலைப்பதும் கண்டு  களத்துமேட்டு மரநிழல்களில் ஆடுபுலி ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்த கால்நடை மேய்ப்போரும், பயிர்க்காவலுக்காக வயல்களில் குடில்கள் அமைத்து காவலுக்கு இருந்தவர்களும்  கைக்காவலுக்கு வைத்திருந்த கம்பு, கட்டை, தடிகளை தூக்கிக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி பாய்ந்து ஓடினர்.


( தொடரும் )
பாகம் 2

3 comments:

KILLERGEE Devakottai said...

பிறகு வருகிறேன் - கில்லர்ஜி

KILLERGEE Devakottai said...

வர்ணனை ஸூப்பர் நண்பா தொடர்கிறேன்....

சிறிது காலம் காணவில்லையே ஏன் ?

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...
வர்ணனை ஸூப்பர் நண்பா தொடர்கிறேன்....

சிறிது காலம் காணவில்லையே ஏன் ?//

அன்பு நண்பருக்கு வணக்கம். காணாமல் போன காரணம் குறித்து devakottaiyan@yahoo.co.in என்ற தங்களது இணைய முகவரிக்கு தனிமடல் இட்டுள்ளேன்.