Sunday, September 10, 2017

வண்டித் தடம் - பாகம் 5










பாகம் 5 - சுக்காண்டியும், முத்துசாமியும்…


சனிக்கிழமைதோறும் காலையில் நீராகரம் மட்டும் அருந்திவிட்டு கல்லிடைக்குறிச்சி   வாரச்சந்தைக்கு வண்டி கட்டி, வாடகைக்கு சாமான்கள் ஏற்றி செல்லும் சுக்காண்டி, சந்தை வாசலில் இருக்கும்  அடர்ந்த வாகைமர நிழலில் வண்டியை நிறுத்தி, உரிமையாளர்கள் உதவியோடு சரக்குகளை இறக்கி, சம்பந்தப்பட்ட கடைகளில் சேர்த்துவிட்டு, மாடுகளையும் அவிழ்த்து, தண்ணீர் காட்டி, வைக்கோல் போட்டு இளைப்பாற விட்டு, விட்டு கிடைத்த கூலிக்கு வயிறு புடைக்க பாய்க்டையில் ரொட்டி சால்னா, மட்டன் பிரியாணி, சிக்கன் சாப்ஸ், ஆம்லேட், அவிச்சமுட்டை என ஏழெட்டு வகையறாக்களை ஒருங்கே உள்ளே தள்ளிவிட்டு, உண்ட களைப்பு தீர மாட்டுவண்டிக்கு அடியில் துண்டை விரித்து படுத்துவிட்டு, வெயில் தாழத்தான் ஊர் திரும்புவான்.

சுக்காண்டி வண்டிவிட்டு உறங்கும்  வாகை மரத்தடியில் மண்பாண்டங்கள், மரஅகப்பை, தார்க்குச்சி, மூக்கணாங்கயிறு, சரடு போன்ற விற்பனைக் கடை வைத்திருந்தவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி.  உறங்கிய பொழுது போக ஓய்வு நேரங்களில் அவரோடுதான் பேசிக்கொண்டு இருப்பான் சுக்காண்டி. தாயில்லாத சுடலையாண்டி மகள் ரெங்கம்மாவை பேசிய நகை போடாததால், “கறுப்பாக இருக்கிறாள். பல் நீண்டு லட்சணமாக இல்லை” என்று கூறி கட்டிக் கொடுத்தவன், தட்டிக் கழித்துச் சென்று விட்டான். அப்பாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அப்படியே கடை வேலைகளில் ஒத்தாசையாக இருந்த ரெங்கம்மாவிற்கும், மனைவியால் புறக்கணிக்கப்பட்ட சுக்காண்டிக்கும் பேசிப் பழகி, ஈர்ப்பாகிவிட்டது.

சுடலையாண்டிக்கும் வேறு ஆதரவு இல்லாததாலும், சுக்காண்டி கதை அறிந்தவர் என்பதாலும், அடுத்தவர் அசிங்கமாக பேச இடம் கொடுக்காமல்,“பிடித்திருந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என அனுமதி கொடுத்துவிட்டார். ஒரு சனியன்று சந்தை முடித்து செல்லும்போது ரெங்கம்மாவையும், வண்டியில் ஏற்றிக்கொண்டு இரவோடு, இரவாக அவன் அம்மாவின் மறைவிற்குப் பின் பூட்டியே கிடந்த வீட்டில் கொண்டு வந்து குடிவைத்து விட்டான் சுக்காண்டி.

விடியற்காலையில் விஷயம் அறிந்த மங்கம்மா பஞ்சாயத்து கூட்டி விட சுக்காண்டியும், ரெங்கம்மாவும் வலுக்கட்டாயமாக ஊர்மந்தைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆளாளுக்கு மங்கம்மாவோடு சேர்ந்து, “அடிக்கணும், பிடிக்கணும். ரெண்டு பேரையும் மொட்டை அடிச்சு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல ஏத்தி ஊரைவிட்டே அடிச்சு விரட்டணும் இதை இப்படியே விட்டா ஊர்ல எல்லாவனும் இப்படி எவளையாவது இழுத்துட்டு வந்துருவான்.” என  ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது மங்கம்மாவின் அழைப்பின் பேரில் அங்கு வந்த புலிமணி, ரெங்கம்மாவை முழுமையாக விசாரித்து, விபரம் அறிந்து கொண்ட பின், “ இதோ பாரு மங்கம்மா. உன் புருஷன் செஞ்சது தப்புன்னாலும், இந்தப் புள்ளை அவ அப்பன் அனுமதியோடுதான் வந்துருக்கா. நம்பி வந்தவளை அவமானப்படுத்தி அனுப்பறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அவ சாபம் உனக்கும் வேண்டாம். நம்ம ஊருக்கும் வேண்டாம். உன் புருஷனுக்கு என்ன தண்டனை குடுக்கணும்ன்னு சொல்லு. பஞ்சாயத்துல பேசி முடிவெடுப்போம்.” என்று கூறினார்.  

புலிமணி பேச்சிற்கு கட்டுப்பட்ட மங்கம்மாவும், “இனிமே அந்த ஆளு என் வீட்டுப் படி ஏறக்கூடாது. எந்த சொத்துலயும் பங்கு கேட்கக்கூடாது. இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான வண்டியையும், மாடுவளையும் உடனே வித்து அந்தப்பணத்தையும் என் பிள்ளைவ பேருல பேங்குல போட்டுடணும். இப்பவும் சரி. எப்பவும் சரி.  எனக்கோ, என் பிள்ளைவளுக்கோ  இவராலயும், அவளாலயும் எந்தப்பிரச்சினையும் வரக்கூடாது.“ என்று அடுக்கடுக்காக அவள்தரப்பு வாதங்களை எடுத்து வைத்தாள்.

மங்கம்மா குணம் அறிந்த சுக்காண்டியும், “ ஏதாவது எதிர்த்து பேசினால் மங்கம்மா மேலும் எகிறுவாள். அனைவர் முன்னும் முகத்தில் காறி உமிழ்ந்து, அடித்து, அவமானப்படுத்தி பிறந்து, வளர்ந்த ஊரை விட்டே விரட்டி விடுவாள். இதுமட்டும் விட்டதே பெரும்பாடு. “ என்று அவள் கூறிய அனைத்திற்கும் ஒத்துக்கொண்டு விட்டான். எல்லாமே எழுத்து வடிவில் பத்திரத்தில் எழுதப்பட்டு, சுக்காண்டி, ரெங்கம்மா, மங்கம்மா, அவள் பிள்ளைகள் மற்றும் சாட்சிகளாக பஞ்சாயத்து பெரிய மனிதர்கள் என அனைவரிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. அதே பஞ்சாயத்திலே அவனது வண்டியும், மாடுகளும் ஏலம் விடப்பட்டு பணமும், பத்திரமும் மங்கம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே இடத்தில் உடனே அவளும் “பணத்தை பிள்ளைகள் பேரில் உள்ள வங்கிக்கணக்குகளில்  பிரித்துப் போட்டு விடுங்கள். பத்திரத்தையும் லாக்கரில் வைத்து விடுங்கள்.” என அவற்றை புலிமணியிடம் கொடுக்க, அதைப் பார்த்துக் கொண்டு இருந்த சுக்காண்டியின் அனைத்து கோபமும் புலிமணி மீது திரும்பி விட்டது.

அந்தப் பஞ்சாயத்திற்குப் பின் ஊரே சுக்காண்டியையும், ரெங்கம்மாவையும் ஒதுக்கி வைத்து விட அவன் நேராக சென்று நின்றது முத்துசாமியிடம்தான். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. முத்துசாமியின் தாயாரானவள் புலிமணியின் தந்தையார் உடன்பிறந்த அத்தையாவாள். புலிமணியின் தாயும், தந்தையும், தமையர்களோடு அதிகாலையில் வயல்வேலைகளுக்குச் சென்றால் பொழுதுசாயத்தான் வீடு திரும்புவார்கள். அப்போது புலிமணியை வளர்த்தது திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்த அத்தைதான் என்பதால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகப்பாசமாக இருப்பார்கள். பின் அவள் புலிமணியின் தாயின் உடன்பிறந்த தம்பிக்கே மணம் முடித்து வைக்கப்பட அந்தப் பாசம் மேலும் கூடிவிட்டது.


என்னதான் முத்துசாமிக்கு புலிமணியை பிடிக்காது என்றாலும், கிழவி எப்போது புலிமணி ஊருக்கு வந்தாலும் ஓடோடிச் சென்று பார்த்து வந்து விடுவாள். முத்துசாமி போக்க்கூடாது என எத்தனை முறை கண்டித்தாலும் காதிலே வாங்கிக் கொள்ள மாட்டாள். அப்படித்தான் ஒருமுறை புலிமணியை பார்த்துவிட்டு புழக்கடை தொழுவாசல் வழியாக வந்தவளை மறித்து வாதம் செய்த முத்துசாமியை மீறி கிழவி வீட்டிற்குள் நுழைய முயன்றதால் ஆத்திரத்தில் பிடித்து முத்துசாமி வேகமாக தள்ளிவிட கீழே குப்புற விழுந்த கிழவி பொருத்தில் அடிபட்டு உடனே உயிரை விட்டுவிட்டாள். தொழுவத்தில் வைக்கோல் அடைந்து கொண்டிருந்த சுக்காண்டிதான் அந்த சம்பவத்திற்கு சாட்சி என்றாலும் யாரிடமும் அதைப்பற்றி கூறாததால் முத்துசாமிக்கு அவன்மீது தனிப்பிரியம். அவனுக்கு அவ்வப்போது பணமும் மற்றும் வேண்டிய பல உதவிகளும் செய்துவந்தார். சுக்காண்டியிடம் புலிமணியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி வெறுப்பு வளர்த்த்தில் முத்துசாமியின் பங்கு மிகமிக அதிகம்.

 ( தொடரும் )


2 comments:

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள் நண்பரே....

துபாய் ராஜா said...

ஊக்க கருத்துரைக்கு நன்றி நண்பரே...