Wednesday, October 19, 2011

வெளிநாட்டு வேலைக்கு செல்லுபவர்களே...

சிங்கப்பூர் அரசாங்க விதிமுறைப்படி  மேலாளர் பணி முதல் அடிமட்ட ஊழியர் வரை பணிக்காக வரும் அனைவரும் மனிதவள மேம்பாட்டு துறையால் நடத்தப்படும் பணியிடப் பாதுகாப்பு குறித்த கட்டாய வகுப்புகளில் சேர்ந்து, படித்து, தேர்வு பெற்றால் மட்டுமே பணிக்கு சேரமுடியும். அந்த வகுப்புகளுக்கு சென்றிருந்த போது சந்தித்த பலரின் கதையும் மிக உருக்கமானது.



ஏஜெண்டுகளை நம்பி ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுத்து  இவர்கள் வருவது இருப்பதிலே கடைமட்ட ஊழியர் பணி ஆகும். அதற்கான  சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ஒன்று  முதல் ஒன்றரை  சிங்கப்பூர் டாலர் பணமாகும்.  எட்டு மணி நேர வேலைக்கு ஒரு நாள்  சம்பளம் சராசரியாக  பத்து சிங்கப்பூர் டாலர்.  எட்டு மணி  நேரத்திற்கு  மேல்  செய்யும் பணிக்கு ஒன்றரை மடங்கு, விடுமுறை நாள் பணிக்கு இரண்டு மடங்கு சம்பளம் என்பதால் ஏஜெண்டுகளிடம் 
கொடுத்த பணத்தை எடுப்பதற்காக உண்ணாமல், உறங்காமல் உயிரை கொடுத்து உழைப்பவர்கள் ஏராளம்.ஏராளம்.


நான் சென்ற வகுப்பு முடிந்து தேர்வு எழுதும் நேரம் வினாத்தாள் கொடுத்தவுடன்  விறுவிறுவென்று விடைகளை எழுதிவிட்டு நிமிர்ந்த நான் எனது அருகில் இருந்தவர் திருதிருவென்று விழித்துக் கொண்டிருப்பது கண்டு என்ன, ஏது என்று கேட்க  எழுதப்படிக்க தெரியாது என்று அவர் கூறிய பதிலால் மிக்க அதிர்ச்சியடைந்தேன். என் அதிர்ச்சிக்கு காரணம் அன்று வகுப்பில் தமிழர்கள் அதிகம் இருந்ததால் தமிழில் தான் பயிற்சி நடந்தது.வினாத்தாளும் தமிழிலேதான் இருந்தது.அன்று  வந்திருந்த வகுப்பாசிரியரும் தமிழர் என்பதால் அவரை அழைத்து விபரம் கூறினேன். இதுபோன்று அன்று பலர் வந்திருப்பதாக கூறி என்னை மேலும் அதிச்சிக்குள்ளாக்கினார் அவர்.


 எனது அருகிலிருந்த எழுதப்படிக்க தெரியாதவர்  எங்கெங்கோ கடன் வாங்கி இந்தியப்பணம் இரண்டு லட்சம் கொடுத்து அந்த பணிக்கு வந்துள்ளார். அந்த பணத்திற்கு ஊரில் ஒரு காய்கறிக்கடையோ, டீக்கடையோ, பெட்டிக்கடையோ
வைத்திருந்தால் கூட குடும்பத்தோடு நிம்மதியாக ஊரில் காலம் கழிக்கலாம்.


உலகின் 180 நாடுகளில் மூன்று கோடிக்கு மேல் இந்தியர்கள் உள்ளனர். இதில், சுமார் இரண்டு கோடி பேர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள் போலி ஏஜன்டுகளிடம் சிக்கி தவிக்கும் நிலையும், படிக்கச் செல்லும் மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் கிடைக்க போராட வேண்டிய நிலையும் தற்போது தலை தூக்கி வருகிறது.


இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, கனடாவுக்கும், சவுதி அரேபியா, துபாய், குவைத் உட்பட வளைகுடா நாடுகளுக்கும் வேலைக்காக செல்பவர்கள், போலி ஏஜன்டுகளால் ஏமாற்றப்படுவது அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில், பல்வேறு நகரங்களில், பல ஆயிரம் தமிழர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களின் நிலை விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளன. மத்திய அரசும் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


சென்ற ஆண்டு மும்பை போலி ஏஜன்டுகளை நம்பி மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற 80 பேர் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில்  தமிழகம் வந்தடைந்தனர். பஞ்சாபிலிருந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 63 பேர் ஏமாற்றப்பட்டு தாயகம் திரும்ப வழியின்றி, ஆறு வருடங்களாக வீதிகளில் தவித்ததாகவும், அதில் ஐந்து பேர் அங்கு இறந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகின.


வெளிநாடுகளுக்கு அரசு மூலம் அனுப்பப்படுபவர்கள் மற்றும் படித்தவர்களுக்கு அவ்வளவாக பிரச்னையில் சிக்குவதில்லை. "எல்லாரும் வெளிநாடு போய் சம்பாதிக்கின்றனர்; நாமும் போவோம்' என்று, படிக்காதவர்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் அங்கு என்ன சம்பளம், என்ன வேலை, பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல், போலி ஏஜன்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். போலி ஏஜன்டுகளிடம் ஏமாறாமல் இருக்கவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள கஷ்ட, நஷ்டங்கள் குறித்தும், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் மூலம் மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.


துபாய், சவுதி அரேபியா உட்பட 17 வெளிநாடுகளில் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களை மீட்க, "இந்தியர்கள் நல நிதி'க்காக மத்திய அரசு நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்துடன் விழிப்புணர்வு பிரசாரத்திற்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விழிப்புணர்வு பிரசாரத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக சேவை அமைப்புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஏமாற்றும் ஏஜன்டுகளை தண்டிக்க போதுமான அளவில் தற்போதைய சட்டத்தில் இடமில்லை. ஏமாற்றும் ஏஜன்டுகளைத் தண்டிக்க, அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளைத் தண்டிக்க, குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கு இனவெறி தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.


முன்னர் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களில் 71 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும், 8 சதவீதம் பேர் பிரிட்டனுக்கும், 7.6 சதவீதம் பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றனர். அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 56 சதவீதமாகக் குறைந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படிப்பு உதவி வசதி, படிக்கும் போதே வேலையும் தேடிக்கொள்ளும் நிலையும் உள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் தற்போது அங்கு படித்து வருகின்றனர்.


இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது கிட்டத்தட்ட இரண்டாயிரம் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. பல இடங்களில் இனவெறி தாக்குதலும் நடத்தப்பட்ட போதும் கூட, அந்நாட்டு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இனவெறி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்பட்ட விசாக்களுக்கான விதிமுறைகளை அந்நாடு, கடந்த ஆண்டு  மார்ச் மாதம் முதல் மிகவும் கடுமையாக்கியுள்ளதால், அறுபது சதவீதம் இந்திய மாணவர்களின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களுக்கு, இந்தியர்களாலேயே பிரச்னை ஏற்படும் நிலையும் தலை தூக்கியுள்ளது. மலேசியாவில் இந்துக்களுக்கு சம உரிமை கோரியும், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை தடுக்கவும் அங்குள்ள இந்தியர்கள் ஒன்றிணைந்து, "இன்ட்ராப்' என்ற அமைப்பு மூலம்  நான்காண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். இதில், 15 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்த இன்ட்ராப் தலைவர்களின் ஒருவரான உதயகுமார், "மனித உரிமை கட்சி'யை  துவங்கினார்.


"ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இந்தியர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை. மலேசியாவில் உள்ள இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதே கட்சியின் வேலையாக இருக்கும்' என்று, உதயகுமார் அறிவித்தார். இது, வரவேற்கப்படக் கூடிய முடிவு என்றாலும் ஆளும் கட்சி அதிருப்தியில் உள்ளதால், இந்தியர்களின் ஒற்றுமை பலத்தை மறைமுகமாகக் குறைக்கும் நோக்கில் தனேந்திரன் தலைமையில், "மலேசிய மக்கள் சக்தி' என்ற பெயரில் புதிய கட்சியை அந்நாட்டு பிரதமர் துவங்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.


பல கட்சி கூட்டணி ஆட்சி நடக்கும் மலேசியாவில், இந்தியர்கள் 20 லட்சம் பேர் உள்ளனர். இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம். அரசியல் மூலம் தனித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இந்திய வம்சாவளியினருக்கு இல்லை. ஆளும் அரசை அனுசரித்தே காரியம் சாதித்துக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. எனவே, வெளிநாடுகளுக்கு பிழைக்கச் செல்பவர்கள் எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

இதே கருத்து குறித்த எனது முந்தைய பதிவுகள்....






புதிதாக வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் சம்பளம், விடுமுறைகள், தங்கும் வசதி, சாப்பாடு போன்ற வசதிகள் குறித்து நன்றாக விசாரித்தறிந்த பின் வெளிநாடு  செல்வது பற்றி சிந்தித்து, செயல்படுவதே சிறந்தது என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மையும், அறிவுரையாகும்.

நன்றி. வணக்கம்.


11 comments:

ப.கந்தசாமி said...

மிகவும் வருந்தத் தக்க நிலை. பேராசை மனிதனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது?

Anonymous said...

// எனது அருகிலிருந்த எழுதப்படிக்க தெரியாதவர் எங்கெங்கோ கடன் வாங்கி இந்தியப்பணம் இரண்டு லட்சம் கொடுத்து அந்த பணிக்கு வந்துள்ளார். அந்த பணத்திற்கு ஊரில் ஒரு காய்கறிக்கடையோ, டீக்கடையோ, பெட்டிக்கடையோ
வைத்திருந்தால் கூட குடும்பத்தோடு நிம்மதியாக ஊரில் காலம் கழிக்கலாம். //

ஒரு மிகச் சிறந்த தொழிலாளியாக வெற்றிநடை போடும் பலர் இந்தியாவில் மிகச் சிறந்த தொழில் முனைவோராக ஆக முடிவதில்லை என்பதே உண்மை. அவர் கிராமப் புறத்தில் இருந்து வந்திருந்தால் ஏற்கனவே காய்கறி / மளிகை கடை வைத்திருப்போரோ சிரமப் படுகிறார்கள் நாமும் ஏன் அவர்களுக்கு போட்டியாக வேண்டும் என நினைத்திருக்கலாம். நகர்ப்புறமாக இருந்தால் போலீஸ் முதல் கார்ப்பரேஷன் வரை கப்பம் கட்டியாக வேண்டுமே!

Unknown said...

அஸ்லாமு அழைக்கும் சகோ நல்ல விழிப்புணர்வு தகவல் இதை மற்றவர்களும் அறியும்படி செய்ய அரசு எதாவது செய்ய வேண்டும்.

ஹேமா said...

நிச்சயம் இந்தப் பதிவை முக்கியமாக வெளிநாட்டு அவாவோடு தவிப்பவர்கள் பார்க்கவேண்டும் !

துபாய் ராஜா said...

// DrPKandaswamyPhD said...

மிகவும் வருந்தத் தக்க நிலை. பேராசை மனிதனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது? //

முதல் வரவிற்கும், முத்தான கருத்திற்கும் நன்றி ஐயா...

துபாய் ராஜா said...

// Anonymous said...

// எனது அருகிலிருந்த எழுதப்படிக்க தெரியாதவர் எங்கெங்கோ கடன் வாங்கி இந்தியப்பணம் இரண்டு லட்சம் கொடுத்து அந்த பணிக்கு வந்துள்ளார். அந்த பணத்திற்கு ஊரில் ஒரு காய்கறிக்கடையோ, டீக்கடையோ, பெட்டிக்கடையோ
வைத்திருந்தால் கூட குடும்பத்தோடு நிம்மதியாக ஊரில் காலம் கழிக்கலாம். //

ஒரு மிகச் சிறந்த தொழிலாளியாக வெற்றிநடை போடும் பலர் இந்தியாவில் மிகச் சிறந்த தொழில் முனைவோராக ஆக முடிவதில்லை என்பதே உண்மை. அவர் கிராமப் புறத்தில் இருந்து வந்திருந்தால் ஏற்கனவே காய்கறி / மளிகை கடை வைத்திருப்போரோ சிரமப் படுகிறார்கள் நாமும் ஏன் அவர்களுக்கு போட்டியாக வேண்டும் என நினைத்திருக்கலாம். நகர்ப்புறமாக இருந்தால் போலீஸ் முதல் கார்ப்பரேஷன் வரை கப்பம் கட்டியாக வேண்டுமே! //


தங்கள் கருத்தும் உண்மை தான் அனானி நண்பரே. நடைமுறை தெரியாமல் ஏஜெண்டுகளை நம்பி லட்சம் லட்சமாக கொடுக்க வேண்டாமே என்பதுதான் எனது கருத்து.

துபாய் ராஜா said...

// ராக்கெட் ராஜாsaid...

அஸ்லாமு அழைக்கும் சகோ நல்ல விழிப்புணர்வு தகவல் இதை மற்றவர்களும் அறியும்படி செய்ய அரசு எதாவது செய்ய வேண்டும். //

அழைக்கும் ஸலாமா ரபதுல்லா உபரக்கத்... வரவிற்கும், கருத்திற்கும் நன்றி ராக்கெட் ராஜா..

துபாய் ராஜா said...

// ஹேமாsaid...

நிச்சயம் இந்தப் பதிவை முக்கியமாக வெளிநாட்டு அவாவோடு தவிப்பவர்கள் பார்க்கவேண்டும் !//

தகுதியுள்ளவர்களே தவிக்கும்போது எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் என்பதே எனது கருத்து சகோதரி...

தக்குடு said...

கத்தார்லையும் இந்த கதைதான். 1 - 1.5 லட்சம் குடுத்து இங்க வந்து பொண்டாட்டி புள்ளையை விட்டுட்டு 650 - 750 ரியால் மாசசம்பளத்துக்கு டிரைவர் வேலை பாக்கரவங்க ஏராளம்!!

'பரிவை' சே.குமார் said...

நல்ல விழிப்புணர்வு தகவல்.

எல்லா இடத்திலும் இதே நிலைதான் நண்பரே,

உணவு உலகம் said...

ஏமாறும் உள்ளங்களின் நிலை கொடுமையானது. நல்ல விழிப்புணர்வு தகவல் தந்தமைக்கு நன்றி.